Wednesday, September 7, 2016

கோபம்

மக்கள் நல்லுறவு

கோபத்தின் கதை!
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.

”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.

முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5, 2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.

இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.

45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.

உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?

உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா?

படித்ததில் பிடித்தது..

மக்கள் நல்லுறவு 

Tuesday, September 6, 2016

CIBIL (CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD)

மக்கள் நல்லுறவு  பகிர்கிறது 

சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களைப்பற்றியும்,கடன் வாங்குபவர்களைப் பற்றி்யும் தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பாகும்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்கள் பற்றிய தகவலையும், அவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவது பற்றிய தகவலையும் இந்த அமைப்பிற்கு தெரிவிக்கும். இதனை இந்த சிபில் அமைப்பு சேகரித்து வைக்கும். இதனை வைத்து ஒருவர் வாங்கியுள்ள கடனைப்பற்றியும் அதனை திருப்பிச் செலுத்தும் அவரது திறனைப் பற்றியும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.
வீடு வாங்க ஹோம் லோன், கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என்று கடன் வாங்குவதற்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது இந்த சிபில்ஸ்கோர் தான்.
நீங்கள் வாங்கிய கடனை அடைக்க, செலுத்தும் தொகையை ஒருமுறை தாமதமாக செலுத்தினால்கூட அதனது பாதிப்பு இந்த சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.
கடன் வாங்குவபரின் சம்பளத் தொகையில் 60% அளவுக்கே அதிகபட்சம் கடன் இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் வாங்கினால்கூட அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.
அதேபோல் கிரடிட்கார்டு லிமிட் தொகையில் அதிகபட்ச தொகையை பயன்படுத்திவிட்டு, குறைந்தபட்ச தொகையை செலுத்தினாலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.
ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிப்பதும் தவறு. வங்கிக்கடன் அல்லது கிரடிட் கார்டு பெற்று ஆறு மாதங்கள் கழித்தே அடுத்த கடனுக்கு அல்லது அடுத்த கிரடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கிக்கடனை சரியாக செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கடனை செலுத்திய 3 மாத்தித்தில் இருந்து 6 மாதங்களுக்குள் சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை விண்ணப்பித்து பெற வேண்டும். சில வேளைகளில் தாங்கள் கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியிருந்தால்கூட வங்கி அதனை சிபில் அமைப்பிடம் தெரிவிக்காமல் இருந்தால், வங்கி மேலாளரிடம் பேசி அதனை சரிசெய்ய வைக்கவேண்டும்.
எதற்கு எவ்வளவு வெயிட்டே்ஜ்?
கடனை திருப்பி செலுத்தும் வகைக்கு 30%
கடனி்ன் கால அளவிற்கு 25%
கடனுக்கும் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் 25%
கிரடிட்கார்டு பயன்படுத்துவதற்கு 20% மும் வெயிட்டேஜ் இருக்கும்.
இன்றைய நிலையில் கை நிறைய கடன் வாங்கிவிட்டு, அதை சரிவர திரும்பக் கட்டாமல், சிபிலில் மாட்டி கடைசியில் புதிதாக கடன் பெறும் தகுதியை இழந்து, அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பலர்.
வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி, சிபிலில் நூற்றுக்கு நூறு எடுக்க என்ன செய்ய வேண்டும் ?
''வங்கிகளில் கடன் வாங்க நினைக்கிற வர்கள் முதலில் ரூ.500 செலுத்தி தங்களுடைய பெயர், தந்தை பெயர், தங்களுடைய முகவரி, பிறந்த தேதி, தொலை பேசி எண்கள் மற்றும் பான் நம்பர், ஓட்டுநர் உரிமம் எண், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் நம்பர் ஆகியவற்றில் அடையாளத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றை சிபில் அமைப்புக்கு அனுப்பி,
தங்களின் சிபில் ஸ்கோர் மற்றும் தங்கள் மீது தங்களுக்கே தெரியாமல் ஏதாவது, கடன் நிலுவை உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சிபில் ஸ்கோர்!
சிபில் ஒவ்வொருவருக்கும் 300 முதல் 900 வரை ஸ்கோர் கொடுக்கிறது. ஏற்கெனவே கடன் வாங்கிய ஒருவர், இன்னொரு கடனுக்கு விண்ணப்பித்து, அவருக்கு 800-க்கு மேல் ஸ்கோர் இருந்தால், அவரது கடன் விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும். அவர்களுக்கு கிரீன் சேனல் கடன் வழங்கப்படும்.
ஸ்கோர் 700 முதல் 800 வரை இருந்தால், ஆவணங்களை சரி பார்த்துவிட்டு வங்கிகள்/நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். ஸ்கோர் 600 முதல் 700-ஆக இருந்தால் தீவிர பரிசீலனைக்குப் பின் விண்ணப்பதாரர் மேல் எந்தத் தவறும் இல்லை என்று விண்ணப்பதாரர் நிரூபித்தால், அவர்களுக்கும் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆனால், விண்ணப்பதாரரின் ஸ்கோர் 600-க்கு கீழே இருந்தால் கடன் கேட்டு வருபவரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக் கப்படும். இவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது.
விண்ணப்பத்தாரரின் ஸ்கோர் சான்றிதழில் விவரம் இல்லை என்பதை என்.ஏ. அல்லது என்.ஹெச். (NA or NH) என்று இருந்தால் அவர்கள் கடனுக்கு புதியவர்கள்.
இதுவரை கடந்த 2 வருடங்களில் அவர்கள் எந்த கடனும் வாங்கவில்லை என்று அர்த்தம். இது மாதிரியான புதியவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும்.
'CIBIL Score sheet-ல் XXX’ என்றோ அல்லது DPD (Days Past Dues) என்றோ போட்டிருந்தால் கவலை வேண்டாம். அவர்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்துகிறார்கள் என்று அர்த்தம்.
ஸ்கோர் குறைய காரணங்கள்..!
கடனை உரிய காலத்தில், உரிய தவணையில் செலுத்தத் தவறினால் ஸ்கோர் குறையும்.
கிரெடிட் கார்டு கடன், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையை தவணையில் செலுத்தினால் அபராதத்திலிருந்து தப்பிக் கலாம். ஆனால், ஸ்கோர் உடனடியாக குறையும். அந்த தவணைக் காலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் உங்கள் ஸ்கோர் குறைந்து கொண்டே போகும்.
நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன் அல்லது கார் கடன் அதிகமாக இருந்து பெர்சனல் லோன் குறைவாக இருந்தால், உங்கள் ஸ்கோர் பாதிக்கப் படாது.
அடமானம் இல்லாத கடன் (உதா. பெர்சனல் லோன்), அடமானக் கடனைவிட (உதா. வீட்டுக் கடன்) அதிகமாக இருந்தால் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும். உதாரணமாக மொத்த கடன் 25 லட்ச ரூபாயாக இருந்தால், இதில் கிரெடிட் கார்டு இரண்டு லட்ச ரூபாய், அடமானம் இல்லாத கடன் 12 லட்ச ரூபாய், கார் லோன் இரண்டு லட்சம் ரூபாய், வீட்டுக் கடன் 9 லட்சம் ரூபாயாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும். ஏனெனில் கடனில் 44% மட்டுமே அடமானத்துடன் கூடிய கடன் (வீட்டுக் கடன்) மீதமுள்ள 56% அடமானம் இல்லாத கடன் (பெர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்).
ஆகவே, பெர்சனல் லோன் கடனையும், கிரெடிட் கார்டு கடனையும் அதிகம் வாங்காமல் இருந்தால் ஸ்கோர் நன்றாகவே இருக்கும்.
வீட்டுக் கடனையும், கார் கடனையும் அதிகபட்சமாக 75% முதல் 80% வரை வாங்கி பயன் அடையலாம்.
ஒருவர் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றால் குறைந்த வட்டியுள்ள ஒரே ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை அங்கு மட்டுமே விண்ணப்பித்தாலே போதும். ஒரே நேரத்தில் ஐந்தாறு வங்கிகளில் விண்ணப்பித்தால் அனைத்து வங்கிகளிலும் உங்கள் பெயர் விசாரிக்கப்பட்டு, அதனால் உங்கள் ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது. இரண்டு கடனுக்கு மத்தியில் குறைந்தபட்சம் 4 முதல் 6 மாத இடைவெளி இருக்க வேண்டும்.
முடிந்த வரை யாருக்கும் கடன் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருந்தால் நல்லது. அவர்கள் பணம் கட்டவில்லை என்றாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப் பட்டு உங்களுக்கு கடன் கிடைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.
கடன் கிடைக்காது!
நீங்கள் கடன் வாங்கி அதை குறிப்பிட்ட தேதியில் செலுத்த தவறி இருந்தால், வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, மீதமுள்ள கடனையோ அல்லது மொத்தத் தொகையையும் தள்ளுபடி செய்திருக்கலாம். இதனால் உங்களுடைய சிபில் சான்றிதழில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது (Written-off) என்றோ, செட்டில் செய்யப் பட்டது (settled) என்றோ வரும். இந்நிலையில் உங்களை அடுத்த ஏழு வருடங்களுக்கு கறுப்புப் பட்டியலில் (Black List) சேர்த்துவிடுவார்கள். இதன் பிறகு அத்தியாவசிய கடனுக்காக நீங்கள் அழுது புலம்பினாலும் கடன் கிடைக்காது.
ஐந்து கட்டளைகள்!
நீங்கள் சிபிலில் அதிக ஸ்கோர் வாங்கி நல்ல பெயர் எடுக்க வேண்டுமெனில் பின்வரும் ஐந்து விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
1. உங்களுடைய இ.எம்.ஐ.-யை நிலுவை தேதிக்கு முன்னதாகவே செலுத்தி விடுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்.
2. கிரெடிட் கார்டு நிலுவையை மொத்தமாக செலுத்துவது நல்லது. குறைந்த பட்ச தொகையைச் செலுத்தி விட்டு மீதியை இ.எம்.ஐ-ல் செலுத்தக் கூடாது.
3. அடமானமில்லாத கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
4. அதிக கிரெடிட் கார்டுகள் இருந்தால் இரண்டு மட்டும் வைத்துக் கொண்டு மீதியை சரண்டர் செய்துவிடுங்கள். அதில் குறைந்த தொகையை பயன்படுத்தவும்.
5.ஒரே நேரத்தில் வீட்டுக் கடன் அல்லது கார் கடனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
இந்த விதிமுறைகளை 24 மாதங்களுக்கு சரியாக பின்பற்றி வந்தால் உங்கள் ஸ்கோர் 300-ஆக இருந்தாலும் அது 800ஆக உயர வாய்ப்பு இருக்கிறது. ஆல் த பெஸ்ட்..!

Monday, September 5, 2016

முதன் முறையாக விமானப் பயணம்

மக்கள் நல்லுறவு  பகிர்கிறது
விமானப் பயணம்
முதன் முறையாக வெளிநாடு பயணம் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விசயங்கள்..!

பல நாடுகள் சுற்றி வந்த நண்பரின் அனுபவம் ,

* டிக்கெட் வாங்கும்போது குறைந்த நிறுத்தங்கள் (stopover) இருக்குமாறு வாங்குங்கள்.. transit இருக்கும் பட்சத்தில், connecting flight நீங்கள் அங்கு வந்து குறைந்தது ரெண்டு மணி நேரம் கழித்து கிளம்புவதாக தேர்வு செய்யுங்கள்.. விமான தாமதங்கள் சகஜமாக இருப்பதால் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் connecting flightஐ விட்டு விட வாய்ப்பு அதிகம்..

* இந்தியாவிலிருந்து எடுத்து செல்லும் மசாலாக்களை விமானத்துக்குள் எடுத்து செல்ல முடியாது.. அதனால் அதை செக்-இன் செய்ய வேண்டும்.. மறக்காதீர்கள்.. வளைகுடா நாடுகளில் நாம் குருமாவுக்கு போடும் கசகசா தடை செய்யப்பட்ட போதைபொருள் வரிசையில் வருவதால் ஜாக்கிரதை.. மாட்டினால் கண்டிப்பாக கம்பி எண்ண வேண்டியிருக்கும்.. (அதை நாம் குருமாவுக்கு போடுவோம்ன்னு அவங்களுக்கும் தெரியும்.. ஆனாலும் அரப்பசங்க ஒதுக்கமாட்டானுங்க )

* புதிய இடம், புதிய உணவு, புதிய மக்கள், பிரிவு என்று முதல் ஒரு மாசம் வர இருக்கும் மன அழுத்தத்தை புரிந்து எதிர்கொள்ள வேண்டும்.. வீட்டில் செல்லமாக வளர்ந்த "குழந்தைகள்" ஜாக்கிரதை... ரூமுக்குள் அடைபட்டு கிடைக்காமல் முடிந்தவரை வெளியே இருந்தால் நல்லது.. குளிராக, வெயிலாக இருக்கும் பட்சத்தில் ரயில், பஸ்களில் பிரயாணிக்கலாம்..

* வங்கிக்கணக்கு ஆரம்பிப்பது தான் முதல் வேலை.. போன், இன்டர்நெட், காஸ், மின்சாரம் என்று பல இதை சார்ந்தே இருக்கும்.. மாணவர்களாக இருந்தால் உங்கள் கல்லூரியின் அடையாள அட்டை தேவை.. வேலை செய்யும் பட்சத்தில் இது ரொம்ப சுலபம்.. அவர்களே பார்த்துகொள்வார்கள்...

* தயங்காமல் எந்தவொரு விஷயத்தையும் கேட்டு செய்யுங்கள்.. நீங்க பாட்டுக்கு பராக்கு பாத்தா காசு வீணாயிடும்.. ஒரு விஷயம் தெரியாம இருந்தாலும் காசு வீணாயிடும்.. டாக்சிக்களை தவிர்த்து அரசு வாகனங்களை பயன்படுத்துங்கள்..

* சக இந்தியர்களை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம்.. சில பேரு அவங்க சொத்தை நீங்க எழுதி வாங்கிடுவீங்களோன்னு கண்டும் காணமா இருப்பாங்க.. ஆனா விடாதீங்க.. விஷயங்களை இயல்பாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. அவர்களை சந்திக்க சிறந்த இடம் பக்கத்தில் இருக்கும் வழிபாட்டு இடங்கள், (வேலை இடம், கல்லூரி தவிர).. உணவு, இருப்பிடம், உடை பற்றிய சிறந்த அறிவுரைகளை அவர்களை தவிர வேறு யாரும் தர முடியாது.. இந்திய காய்கறிகள், மசாலாக்கள் அநேகமாக எல்லா வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.. ஆனால் preservatives அதிகமாக இருப்பதால் சுவை மாறுபடும்..

* மேற்கத்திய நாடுகளான ஸ்வீடன், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளில் மக்களிடையே technology acceptance ரொம்ப அதிகம்.. எனக்கு தெரிந்த ஒரு பாட்டி அங்கு 500 Mbps இன்டர்நெட் உபயோகிக்கிறார்... விலையும் அதிகமில்லை.. நல்ல இன்டர்நெட் இணைப்பு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. மொக்கையாக வாங்கிவிட்டு..contract இல் நுழைந்துவிட்டு சங்கடப்படாதீர்கள்... இந்தியாவிற்கு பேச இன்டர்நெட் கண்டிப்பாக தேவை... உங்கள் வீட்டிலும் இன்டர்நெட் கொடுத்து பெற்றோர்களுக்கு கற்றுகொடுப்பது ரொம்ப முக்கியம்.. டிவி இணைப்பும் (ADSL) பெரும்பாலும் சேர்ந்து வருவதால் டிவியும் வாங்கிடலாம்..

*பஸ், ரயில் என்று எங்கு சென்றாலும் ஸ்மார்ட்கார்டுகள் தான்.. போக்குவரத்துக்கு சலுகை அட்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. மாணவர்களுக்கு விசேஷ சலுகைகள் உண்டு.. எல்லாமே நேரத்துக்கு நடப்பதால் தாமதமா வந்தால் தர்மசங்கடங்கள் நிச்சயம்...

* வசிக்கும் நாட்டில் வரி பற்றிய தகவல்களை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்... சில சமயம் நம் நாடு திரும்பும்போது கட்டிய வரி பணத்தில் சிலதை திரும்ப பெறலாம்.. வளைகுடாவில் வரி கிடையாது

* இன்சூரன்ஸ் ரொம்ப முக்கியம்..பல்லுக்கு தனியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.. இது இல்லையென்றால் தீட்டி விடுவார்கள்..

* இந்தியாவுக்கு கொண்டு செல்ல Electronic பொருட்கள் வாங்கும்போது அது இந்தியாவில் என்ன விலை என்று தெரிந்து வாங்குங்கள்.. உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவை விட சில பொருட்கள் விலை அதிகம்.. இந்தியா புறப்பட ரெண்டு மாதங்களுக்கு முன் taxfree யாக வாங்கலாம்.. பிரிக்கமுடியாதபடி சீல் செய்து தருவார்கள்..இந்தியா எடுத்து வந்து உபயோகிக்கலாம்...

* கல்லூரி மாணவர்களுக்கு: ஜெராக்ஸ் எடுப்பது, மாற்று சாவி செய்வது எனக்கு தெரிந்து ஸ்வீடன், பின்லாண்டு, நார்வேயில் ரொம்ப கஷ்டம்... பிரிட்டனில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.. அதனால் தயாராக இந்தியாவில் வாங்கி வந்து விடுங்கள்.. ஏனென்றால் புத்தகங்கள் விலை அதிகம்..

* பிரிட்டன், scandinavia போல் இல்லை...ஸ்வீடன் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் வந்தால், பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தது போல் இருக்கும்.. பிரிட்டனில் possibilities அதிகம்.. நவீன இந்தியா மாதிரி இருக்கும்.. எல்லா பொருளும் கிடைக்கும்.. பொது இடங்களில் ஆண்-பெண் நெருக்கங்கள் ஸ்வீடனில் மிக அதிகம்.. யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்..topless ஆகா குளிக்கவும் சட்டபடி முடியும்.. பிரிட்டனில் அப்படி இல்லை... முத்தமே சில நேரங்களில் தான்... ஸ்வீடனில் என்னால் சொல்ல முடியவில்லை.. நான் சொல்ல வருவது என்னவென்றால்.. இதையெல்லாம் நீங்களும் கண்டு காணமல் இருக்க வேண்டும் என்பதே... staring is considered indecent.. (அப்ப அவங்க பண்றது என்னவாம்ன்னு கேக்காதீங்க..)

* Pub களில் குடித்துவிட்டு, டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிடுங்கள்.. அதுக்கு மேல் அடியெடுத்து வைக்காதீர்கள்... சோக்காளியா இருந்தா சீக்காளியா ஆயிடுவீங்க..


* கடைசியாக... இந்தியா வரும்போது, ஸீன் போடுவதை தவிர்த்து, நம் நாட்டில் இருக்கும் சிறப்புக்களை எண்ணி பாருங்கள்... இந்தியாவை அடிக்கடி compare செய்து எரிச்சலூட்டாதீர்கள்.. நண்பர்களுக்கு தண்ணி, தம் வாங்கி வருவதை விட ஷூக்கள், துணிகள் வாங்கி வந்து கொடுங்கள்...கண்டிப்பாக பெற்றோரை அழைத்து செல்லுங்கள்.."

காவல் துறை ஆலோசனைகள்

மக்கள் நல்லுறவு  பகிர்கிறது
காவல் துறை ஆலோசனைகள்

பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இரு க்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளைய டிப்பதும், அவற்றை தடுக்க‍வரும் பெண்களை கொலை செய்வதும் நகை பணத்துடன் தப்பி ஓடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ள‍ன.

மேலும் நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல் லும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

இதனால் காவல் துறையினர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க‍, அவர்களுக்கு 12 ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்
.
காவல்துறையினர் வழங்கிய ஆலோசனைகள்
***************************************************
1. பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் போது கதவை உள்பக்கமாக பூட்டி வைக்க வேண்டும். கதவை திறந்து வைத்துவிட்டு, வீட்டுக்குள்ளே வேலைகளிலேயே மூழ்கிப் போகக் கூடாது.

2. வீட்டின் வாயிற் கதவில், ”லென்ஸ்” கண்டிப்பாக பொருத்த வேண் டும். அதோடு நில்லாமல் வீட்டின் மர கதவுக்கு முன் இரும்பு கிரில் கதவுக ளை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.

3. ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத் தையும் சொல்லாதீர்கள். தங்கள் கணவ ர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்பன போன்ற விஷயங்களையும், கணவர் வெளியூர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக் கூடாது.

4. தற்காப்பு கலை: வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற கலைகளை கற்றுக் கொண்டால் நல்லது. திடீரென்று கொள்ளையர்களாக மாறும் நண்பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். நகைகளை கொடுக்க மாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வர வழைப்பதை விட, கொள்ளையர்களிடம் புத்திசாலித் தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டி விடலாம். அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.

5. அறிமுகம் இல்லாத நபர்களையோ, அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ் நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பி விடுங்கள்.

6. வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும் போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ண முள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.

7. முதியவர்கள்: வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை வங்கி லாக்கரில் கண்டிப்பாக வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.

8. அடுக்குமாடிகள் மற்றும் பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்போடு பழக்கம் வைத்துக்கொண்டால் ஆபத்து நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.

9. ஜோதிடர்கள்: ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை, தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின் பெயர்கள், அவர்களது முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே காரியத்தை முடித்து விட்டு, அவர்களை அனுப்பி விடுவது சால சிறந்தது.

10. டெலிபோன் எண்கள்: அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

11.ஒவ்வொரு வீட்டிலும் அருகிலுள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண், தீயணைப்புத்துறை டெலிபோன் எண், அவசர போலீஸ் தொலைபேசி எண், அல்லது தங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் பணி புரியும் அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது டெலிபோன் எண்களை ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருக்கலாம். ஆபத்து காலங்களில் இந்த டெலிபோன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்பதற்கு வசதியாக இருக்கும்.

12. இதேபோல, காவல்துறையினர் சமுதாயத்தில் நடக்கும் மற்ற குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளையும் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க உள்ளனர். பொது மக்களும் அக்கரை எடுத்துக் கொண்டு, இந்த அறிவுறைகளை நோட்டீஸாக அடித்து ஒவ்வொரு வீட்டிற்கும் வினியோகிக்கலாம்.


இளைய சமுதாயம் இதில் முனைப்புடன் செயல்பட்டால் குற்றங்கள் குறையும்

Friday, September 2, 2016

consumer rights

பொருட்களை விலை கொடுத்து வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை எவை?

முதலில் வாங்கும் பொருள் மூலப்படிவமான பொருள்தானா (Original) என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொருளுடன் அச்சிடப்பட்டு வரும் விவரங்களை படித்து அந்த பொருளை பற்றிய முழுவதும் தெரிந்து கொள்க. குறிப்பாக மின்சார சாதனங்கள் வாங்கும் போது ISI போன்று பொருளுக்கு தரச்சான்று ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து வாங்கலாம். அப்படி வாங்கும் பொருட்களின் விலை, தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், முகவரி, கஸ்டமர் கேர் நம்பர் இருப்பதை உறுதி செய்யுங்கள். நவ நாகரீக வளர்ச்சியால் சிறிய நகரங்கள் முதல் சென்னை போன்ற பெரு நகரங்கள் வரை தொடர் சில்லரை வணிக நிறுவங்கள் (Super Market Chain Stores) செயல் படுகின்றன. அவர்கள் கண்கவரும் வகைகளில் பொருட்களை அடுக்கி வைத்திருகின்றனர். எனவே நாம் தேர்வு செய்யும் போது பொறுமையுடன் விபரங்களை பார்வையிட அதுவும் ஒரு வசதியாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாங்கும் பொருட்களுக்கு தரப்படும் பில் மற்றும் உத்திரவாத சான்று (Guarantee Card) முதலியவற்றை பத்திரமாக பாதுகாத்து வையுங்கள். பின்னர் குறை ஏதும் தெரிந்தால் நிவர்த்தி செய்யும் உத்திரவாதத்தை செயல்படுத்த இது கண்டிப்பாக தேவைப்படும்.

நுகர்வோர் தாம் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிந்து உடனேயே நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டுமா?

இல்லை. முதலில் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் சென்று தாம் கொள்முதல் செய்த பொருளின் குறைபாட்டை எடுத்துக்கூறி சரி செய்து கொடுக்கும்படி கூறலாம். பெரும்பாலான நிறுவனங்கள் இவ்வாறு புகார் வந்தவுடன் சரியான பொருட்களை உடன் மாற்றி கொடுத்துவிடுவர். அல்லது நுகர்வோரிடம் பெற்ற விலைக்கான தொகையோ அல்லது வேறு பொருட்களோ திருப்பி வழங்கிவிடுவார்.

நுகர்வோர் எப்போது நீதிமன்றத்தை அணுக வேண்டும்?

முதலி விற்பனையாளரிடம் நேரிடையாக சென்று முறையிடலாம். உற்பத்தி தொடர்பான குறைகள் இருந்தால் சம்மந்த்ப்பட்ட நிறுவனத்திற்கு முதலில் எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம். உற்பத்தியாளரிடம் நேரடியாக முறையிட்டும் குறையை நிவர்த்தி செய்யாமல் மறுத்தளித்தல் செய்யும்போது அல்லது தம்முடைய குறைகளை கேட்காமல் மறுப்பது தெரியவரும்போது மேற்படி பொருள் கொள்முதல் செய்ததற்கான பட்டியல், உத்திரவாதம் ஏதும் அளித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தை அணுகி தாம் பாதிக்கப்பட்டதை முறையீடு செய்யலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவது எப்படி?

நுகர்வோர் நீதிமன்றங்களை பொறுத்த வரை மற்ற நீதிமன்றங்களில் இருந்து மாறுபட்டு நுகர்வோர் நலன்களை காக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. எளிமையான நடைமுறைகளுடன். நீதிமன்ற கட்டணங்களும் குறைவே. பாதிக்கப்ட்ட நுகர்வோர் எளிதில் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அவ்வாறு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பும் செயல்பாடும் என்ன..?

நுகர்வோர் நலனில் அக்கறை கொண்டும், இழப்பீட்டின் மதிப்பீட்டின் முறையிலும் நீதி மன்றங்கள் மூன்றடுக்கு (Three Tier Structure ) செயல் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் நீதிமன்றங்கள் மாவட்ட அளவில் ”மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம்”, தேசிய அளவில் ”தேசிய ஆணையம்” என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறது.

நுகர்வோர் நீதி மன்றங்களின் வரையறைகள் என்ன?

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களின் மாவட்டங்களில் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள் செயல்படுகிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 30 மாவட்ட குறை தீர் மன்றங்கள் உள்ளது.

பாதிகப்பட்ட நுகர்வோர் தனது புகாரில் கோரப்படும் இழப்பீட்டின் மதிப்பு மற்றும் குறைபாடுள்ள பொருட்களின் மதிப்பு அல்லது சேவையின் மதிப்பு ரூ 20 லட்சத்திற்கு உட்பட்டிருந்தால் புகாரினை அதற்குரிய கட்டணத்துடன் மாவட்ட நுகர்வோர் மன்றத்திலும் (District Consumer Forum) ரூ 20 லட்சத்திற்கு அதிகமாகவும் ரூ 1 கோடிக்கு உட்பட்டும் இருந்தால் அதற்குரிய கட்டணத்துடன் மாநில நுகர்வோர் நீதி மன்றத்திலும் (State Consumer Disputes Redressal Commission) ரூ 1 கோடிக்கு அதிகமாக இருந்தால் அதற்குரிய கட்டணத்துடன் தேசிய நுகர்வோர் நீதிமன்றத்திலும் (National Consumer Disputes Redressal Commission – NCDRC) வழக்கினை பதிவு செய்ய வேண்டும்.

நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால் என்னென்ன நிவாரணம் கிடைக்கும்..?

இந்த வழக்கு சரியானதுதான், நுகர்வோர் குறைபாடுடைய பொருள்/சேவையால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என நுகர்வோர் நீதிமன்றம் கருதுமாயின் உடன் கீழ்காணும் நிவாரணங்களை செய்யும்படி எதிர்தரப்பினருக்கு உத்திரவிடுகிறது.

** குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையை உடனடியாக அகற்றும்படி கோருதல்.

**குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டும்படி கோருதல்.

**இந்த வழக்கிற்கான செலவு தொகையை வழங்கும்படி கோருதல்.

**குறைபாடுடைய பொருளுக்கு பதிலாக அதே மாதிரியான வேறு நல்ல பொருளை வழங்கும்படி கோருதல்.

**பெற்ற குறைபாடுடைய பொருள்/சேவையின் விலையை உடனடியாக திரும்ப வழங்கும்படி கோருதல்.

**உடனடியாக இவ்வாறான நேர்மையற்ற வியாபார செயலை மேலும் தொடராமல் நிறுத்தம் செய்யும்படி உத்திரவிடுதல்.

**அபாயம் விளைவிக்கும் பொருள் ஏதும் சந்தையிடப்பட்டிருந்தால் உடனடியாக அப்பொருட்கள் சந்தையிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி உத்திரவிடுதல் என பலவகையான நிவாரணங்களை பெற முடியும்.


இந்த பதிவு உங்கள் உபயோகமாக இருந்தால் ஷேர் செய்யவும்