Wednesday, April 25, 2018

மது

மனிதனை மனிதன் அழிக்கும் மது!

மதுவோடு ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்களே!

மதுபானம் தயாரிக்க அனுமதி கொடுத்தவன், 

அதற்க்கு தேவையான மூலப்பொருட்களை 
 கொண்டு  மது பானத்தை தயாரிப்பவன், 

 மதுபானங்களை விற்பனை கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்,

மது பானம் விற்க இடத்தை அளித்து ஏற்பாடு செய்தவன், 

 யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ அதை வாங்கி ஊரெல்லாம்  விற்பனை செய்பவன், 

 மதுபானங்களை பரிமாறுபவன்
மதுபானங்களை குடிப்பவன்,

மதுபானக் கடையின் முலம் ,விற்பனை முலம் நேரிடையாக, மறைமுகமாக  பயனடைந்தவன், 
மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன்

மதுபானங்களை வாங்குபவன்
மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ அவன்
மீதும் இறைவனின்  சாபம் மெல்ல மெல்ல இறங்குகிறது.'

மதுவின் மூலம் கிடைக்கும் வருமானம் இன்று இப்போழுது மகிழ்ச்சியாய் இன்பமாய் தெரியும், இறுதியில் துன்பத்தில் முடியும்!

மதுவின் மூலம் சேர்த்த செல்வம் மெல்ல மெல்ல உன் செல்வங்களை பாதிக்கும், 

மதுவின் மூலம்,  மதுவை கொண்டு  பயனடைந்தவனின் வெற்றி இறுதியில் தோல்வியில் முடியும்,

மதுவால் விரைவாக தேடி வரும் மரணம்! தேடிவரும் துன்பம்! 

தேவையா உனக்கு?

மனிதநேயம்

இந்த ஒற்றுமையே நாட்டின் வளர்ச்சி!  வாழ்த்துக்கள் 

கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் வசித்துவருகிறார்கள். இந்த மாவட்டத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர்.

வளைகுடா, பணம் கொழிக்கும் பூமி. கேரள மாநிலத்தின் 'கால்பந்து தலைநகரம்' என்றும் மலப்புரத்தைச் சொல்வார்கள். மலப்புரம் மாவட்டத்தில் எங்கு நோக்கினாலும் மசூதிகள் காணப்படும்.

மலப்புரம் அருகே உள்ள புன்னதாலா என்கிற கிராமத்தில் மசூதிகளுக்கு மத்தியில் சிறிய இந்து கோயில் ஒன்று இருந்தது. 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில், நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலிக்கிறார் விஷ்ணு பகவான்.

புன்னதாலா கிராமத்தில் வசிக்கும் இந்து மக்களுக்கு, இந்தக் கோயில்தான் ஒரே வழிபாட்டுத்தலம். கோயிலோ இடிந்து தகர்ந்துபோய் கிடந்தது. அதைச் சீரமைத்துக் கட்டவேண்டும் என்பது புன்னதாலா வாழ் இந்து மக்களின் ஆசை. அவர்களிடத்திலோ, நிதி இல்லை. நிதி திரட்ட முயன்றும் முடியாமல்போனதால், கோயில் சீரமைப்புப் பணி பல ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்து மக்களின் ஆசையையும் இயலாமையையும் அறிந்த புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், உதவிக்கு ஓடி வந்தனர்.

'உங்கள் கோயிலை நாங்கள் கட்டித்தருகிறோம்' எனக் கூறி நிதி வசூலிக்கத் தொடங்கினர். சுமார் 20 லட்சம் ரூபாய் திரண்டது. புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், இந்து கோயிலைச் சீரமைக்க நிதியை அள்ளி வழங்கினர்.

இந்துக்கள் கண்களிலோ ஆனந்தக்கண்ணீர்!
திரண்ட நிதியை கோயில் கமிட்டியிடம் அளித்து, நரசிம்மமூர்த்தி ஆலயத்தைக் கட்டுமாறு இஸ்லாமியர்கள் கேட்டுக்கொண்டனர். கோயில் முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டது. நிதி திரட்டிக் கொடுத்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக இஸ்லாமிய மக்கள் ஒதுங்கிவிடவில்லை. கோயிலின் சீரமைப்புப் பணிகளிலும் உடல் உழைப்பை நல்கினர்.

நெகிழ்ந்துபோன புன்னதாலா இந்து மக்கள், நன்றிக்கடனாக இஸ்லாமிய மக்களுக்கு கைம்மாறு செய்ய முடிவுசெய்திருந்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ரம்ஜான் நோன்பும் வந்தது. புன்னதாலா வாழ் இந்து மக்கள், இஸ்லாமிய மக்களுக்கு கோயில் வளாகத்தில் இஃப்தார் விருந்து வழங்க முடிவுசெய்து, அழைப்புவிடுத்தனர்.

அத்தனை இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, கோயில் கமிட்டி சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது.

நரசிம்மமூர்த்தி ஆலய வளாகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு விருந்து வழங்கப்பட்டது. இதில், 400 இஸ்லாமிய மக்களும் உள்ளூர் கிராம மக்களும் மகிழ்வுடன் பங்கேற்றனர். பரிமாறப்பட்ட சைவ உணவை இஸ்லாமிய மக்கள் ருசித்தனர்.

கோயில் செயலாளர் மோகனன் கூறுகையில்,

''எங்கள் கிராமத்தில் இந்து-இஸ்லாமிய மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்துவருகிறோம். நல்லது கெட்டது எதுவென்றாலும் இஸ்லாமிய மக்களுடன் கலந்து பேசி முடிவுசெய்வோம். இந்தக் கோயிலைக் கட்ட, சுமார் 20 லட்சம் ரூபாய் இஸ்லாமிய மக்கள் தந்தனர். யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அது அவர்களின் உரிமை. எல்லாவற்றையும் தாண்டி 'மனிதம்' என்ற ஒற்றை வரியில் நாங்கள் இணைந்து நிற்கிறோம்'' என்றார்.

மனிதநேயத்தை மிஞ்சியது எதுவுமேயில்லை
இறைவன் படைத்த உயிரை பலிகொடுத்து எந்த கடவுளையும் திருப்தி படுத்த முடியாது

மனித நேயம் மகத்தானது! 

மனித பிறவி மேன்மையானது அதை அனைவரும் போற்றுவோம்.

நல்லதை செய்

உபதேசங்கள்...
------------------------------
அதிகாலையில் எழுந்திருங்கள், 
மாலை வேலைகளில் தூங்க வேண்டாம் 

மது அருந்துவர்களிடம் தள்ளி இருங்கள் 
நாற்றமுற்றவர்கலோடு அமர வேண்டாம்.

தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்,

உங்கள் இடது கையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம்,

 உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்,

 உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்,
 காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்,

கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது,
 கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது,

உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும். கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது,

சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது 
 மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம், 
கழிப்பறை உள்ளே பேச வேண்டாம்,
உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்,
உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்,

நடந்து செல்லும்போது பின்னால் அடிக்கடி திரும்பி பார்க்க வேண்டாம்,

நடக்கும் போது உங்கள் கால்களை பூமியில் முத்திரை பதிக்க வேண்டாம்,

 உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்,
எந்த நேரத்திலும் பொய் பேச கூடாது,

 சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது,
மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்,

உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்,

உண்ணும் உணவை குறைக்கூற வேண்டாம், 
பிச்சைக்காரர்களை பசியாளர்களை விரட்டியடிக்காதீர்கள், 

விருந்தாளியை நல்ல மனதோடு உபசரியுங்கள்.

வறுமையின் போது பொருமை காக்கவும்.

நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்,
செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்,

உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்,

இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.,
அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.

ஒரு நாளைக்கு முடிந்தவரையில்  பாவமன்னிப்பு தேடுங்கள்

இருட்டில் சாப்பிட கூடாது, வாய் முழுக்க சாப்பிட வேண்டாம். 

நல்லதை நினை, நல்லதை பேசு, நல்லதை செய், நல்லதே நடக்கும்! 

பெண்ணை நேசி


மக்கள் நல்லுறவு  பகிர்கிறது
பெண்ணை நேசி
ஆண்களும் இதை கட்டயமாக படியுங்கள்.

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்.

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்ததுஉடனே நிச்சயம் செய்து விட்டனர், இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்.

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம். வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது.

நாளை திருமண நாள்...
அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது.வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது. தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை.

ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது, தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்.

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்.
விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.

அங்கே... தங்கை தனது புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள். அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?" என்றாள்.

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்.? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்.

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன?" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள். அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா" என்றார்.

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்.
எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்.

எங்கிருந்தோ குரல்.. "அடியே உள்ள போ... கறுத்து போக போற... நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத..." பாட்டியின் குரல் தான் அது.

எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள். ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. "என்னாச்சுடி என் ராசாத்தி..." பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்.

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது." என்று அழுதாள்.உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்.

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அழாதே அக்கா மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்.

அன்று இரவு...அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்.
நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது.

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு. ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்.

நேசியுங்கள்  பெண்களை மற்றும் அவர்களின் உணர்வுகளை...

எதை விரும்புகிறது

இன்று உண்மையிலேயே நாட்டில் 80% மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்!

அடுத்தவன் உணர்ச்சிக்கு மதிப்பு கொடு!
ஜாதி, மதம், இனம், மொழியால் அரசியல் செய்யாதே! மக்களை பிரிக்காதே! 
யாராக இருந்தாலும் அமைதி ஊர்வலத்திற்க்கு ஆதரவு கொடு!
கலவரத்தை தடு! களங்கத்தை உண்டாக்காதே!

அறிவோடு செயல்படு! 
அடுத்தவர் வழிபாட்டை பழிக்காதே!
அனைவரையும் அன்போடு நேசி! 
மனிதனை மனிதனாக மதி! மதத்தால் பிரிக்காதே!  
மனிதநேயத்தோடு வாழ்க!
அமைதியோடு வாழ்க! 

இதைத்தான் உள்ளே வைத்துக்கொண்டு வெளியே சொல்ல முடியாமல், செயலில் காணாது! மவுனம் காத்து வருகிறார்கள்! உண்மையில் இதைத் தான் நாம் விரும்புகின்றோம்!

நாடு வளம் பெற

நாடு வளம் பெற வேண்டும் என்றால் 
நல்ல அரசன் நாட்டுக்கு அமையவேண்டும்!

அரசன் எப்படி இருக்க வேண்டும்?

அரசன் என்பவனுக்கு நல்ல புத்தி திறமை, பொறுமை,கொண்டவனாகவும்,

எதிரிக்குஅடிபணிந்து செல்லாத வீரம், நிர்வாகத் திறமை, மக்களிடம், அன்பு, கருணை, நீதி, நியாயம், நேர்மை,கொண்டவராக,  பாதுகாவலனாக   இருக்க வேண்டும், குறிப்பாக  மக்களால் தேர்தெடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்,

அப்படி நாட்டுக்கு ஒரு அரசன் அமைந்தால், நாடு செழிக்கும், மழை பொழியும், மண் வளமாகும், செல்வ செழிப்புடன், குழப்பம் இல்லாமால், சண்டை சச்சரவு இல்லாமல் நாட்டு மக்களும் நலமுடன், வளமுடன் இருப்பார்கள், இது தான் வரலாறு!  

சரி இன்றைய அரசர்கள் எப்படி? மந்திரிகள் எப்படி?


நீதி

என்று இந்த நாடு ஜாதி, மதத்திற்க்கு  முக்கியத்துவம் அளிக்காதோ அன்று நாடு வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும்!

கல்விக்கு ஜாதி, வாய்ப்புக்கு ஜாதி, வாக்குக்கு ஜாதி, வாழ்க்கைக்கு ஜாதி, அப்புறம் கிடைக்குமா நீதி!

மாத்தியோசி

எப்படி ஆங்கிலேயன் இந்தியாவை கைப்பற்றினான்?

அதுபோல தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல வட மாநிலத்தார்கள் தொழில் முலம் கால் பதிப்பார்கள் ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் இருக்கும், கூலி வேலையில் தொடங்கி, பான்மசாலா, வட்டிதொழில் , பேல்பூரி,இஞ்சி டீ கடை,  கட்டிட வேலை, அரசு துறை அதிகாரப் பதவி  என நாளுக்கு நாள் மெல்ல ஆக்கிரமிப்பு செய்வார்கள், தொழில் விரிவாக்கம் ஆகும்.

முன்னே என்ன தான் சம்பாதித்தாலும்  வாடகைக்கு வீடு வாங்கி தான் இருப்பார்கள், ஊருக்கு போய் தான் சொத்து சேர்ப்பார்கள் ஆனால்  இப்போ சொந்தமாக இங்கேயே வீடு நிலம் வாங்கி செட்டிலாகி விடுகிறார்கள், தமிழ் நாடு பாதுகாப்பு, என பதில் வரும், ஆதார் வாக்காளர் அட்டை வாங்கப்படும்.

மெல்ல மக்களை தன் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து விடுவார்கள், பலத்தை கூட்டுவார்கள், ஆட்களை மெல்ல மெல்ல மறைமுக கட்சிகளில் இணைப்பார்கள், தேர்தல் செலவுக்கு அள்ளி அள்ளி பணம் தருவார்கள், ஆக தமிழ் நாட்டில் திராவிடம் மறைய  பூக்கள்  மலர இதுவும் ஒரு  வழியா?  கொஞ்சம் மாத்தியேசி! எச்சரிக்கையாய் இரு!

நாடு எங்கே செல்கிறது

நாடு எங்கே செல்கிறது?

ஒவ்வொரு செயலுக்கும் என்ன லாபம் என்பதை கணக்கிட தொடங்கி மெல்ல நகருகிறது, 

உதாரணம்:
நீரை சேமிக்க வழியில்லை, நிலத்தடி நீரை பாதுகாக்க வழியில்லை, கடல் ஏரி, குளம் நீர்களை மறு சுழற்சி, சுத்தகரிப்பு  செய்ய நல்ல திட்டமில்லை, தொலை நோக்கு பார்வையில்லை, நல்ல திட்டங்கள் இல்லை, இவையனைத்தும் செய்யாமல் இருக்க என்ன வழி? எதன் மூலம் பணம் வரும்.

ஒரு  திட்டங்களின் அறிவிப்பின் மூலம் எவ்வளவு வரும், தொடங்கும் போது எவ்வளவு வரும், முடியும் போது எவ்வளவு வரும் என முன்பே திட்டமிடத் தெரிந்தவர்கள் இப்போழுது இந்த நாட்டை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு திட்டத்தை எதிர்பதின் முலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என ஒரு கூட்டம், பெயருக்கு எதிர்த்து பதுங்கும் கூட்டம், பாய ஒரு கூட்டம், ஆக எந்த வித பிரதிபலன் பாராமல் உண்மையாய் மக்களுக்காக குரல் கொடுத்து போராடுபவர்களுக்கு இறுதியில்  கிடைப்பது அடி,கைது, சிறைதண்டனை, இழப்பு, ஏமாற்றம், இது தான் இன்றைய அரசியல்.

நாடு பணம், சுயலாபத்தை நோக்கி வேகமாக  செல்கிறது!

வாசகர் கேட்ட கேள்வி

ஒரு வாசகர் கேட்ட கேள்வி :

கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம்  எப்படி உருவானது?

அன்றாடம் காணும் மக்கள் பிரச்சனைகள், பதவி வாங்கி வேலை செய்யாமல் இருப்பவர்கள், மக்கள் குறைகளை தெரிவிக்க, நிவர்த்தி செய்ய சிறந்த வழி சங்கம், தனி மனிதன் குரல் கேட்காது, தனி மரம் தோப்பாகது, அதற்க்காக இருக்கும் சில நண்பர்கள், நல்ல உள்ளங்களை இணைத்து உருவானது கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம், இதில் சந்தா இல்லை, குறிப்பாக ஜாதி, மதம், கட்சி, பார்பதில்லை," ஒன்று பட்டால் உண்டு தீர்வு" .

இந்த சங்கத்தின் மூலம் பல நல்ல விசயங்களை, செய்கிறோம் ,மக்கள் குறைகளை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி முடிந்தவரையில் அவர்களுடன் இணைந்து செய்து தருகிறோம்,மருத்துவ முகாம், விழிப்புணர்வு நோய் தடுப்பு செய்திகள், சாலை வசதி, குப்பைகளை அகற்ற நடவடிக்கை, மாநகராட்சி பிரச்சனைகள், தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது,  இப்படிபட்ட  மக்கள் பணிகளுக்கு எங்களுக்கு,ஆதரவு,  ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து அரசு துறைகளுக்கும் நன்றி. 

உங்களை பற்றி :

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன், அனைத்து கஷ்டத்தையும் உணர்ந்தவன், என் தந்தை தான் எனக்கு வழிகாட்டி, அடுத்தவர்களுக்கு உதவுவது,  பணத்தின் மீது ஆசைப்படாதே, அன்பு செலுத்துதல், தான தர்மம் செய்வது, உழைப்பு நேர்மை  போன்ற விசயங்களை எனக்கு உணர்த்தியவர், அவர் தான் எனக்கு ரோல்மாடல், என் ஹீரோ, அவருக்கு மகனாக படைத்த ஆண்டவனுக்கு நன்றி, மேலும்  நல்ல நண்பர்கள் அமைந்தது எனக்கு கிடைத்த வரம்! 

நீங்கள் எப்படி இந்த பத்திரிக்கை துறைக்கு வந்தீர்கள்?

நான் தினமும் தினத்தந்தி, தினமலர் போன்ற நாளேடுகளை  வாசித்து  வந்தேன்.

நம் கண் முன்னே நடக்கும் சம்பவங்கள், மக்கள் பிரச்சனைகளை எடுத்து கூற சிறந்த வழி பத்திரிகை தான் என நம்பினேன்! அதனால்  என் கண் முன்னே நடைபெறும் சம்பவங்கள் பிரச்சனைகளை பத்திரிகை அலுவலகங்களுக்கு அவ்வோப்போது அனுப்பி வந்தேன்! அனுப்பிய பிறகு ஒரு மனத்திருப்தி இருந்தது, ஆனால் ஒருநாளும் நாளேடுகளில் வந்ததில்லை! 

ஒரு நாள் பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் நீங்களும் ரிப்போர்டர் ஆகலாம்! என்ற தலைப்பு, அழைப்பு,  நேர்காணல் தேதியும் இருந்தது, விண்ணப்பித்தேன், அழைப்பு வந்தது, நேரில் சென்றேன், இருபதைந்து பேர் இருந்தார்கள், அதில் இருபது பேர் கல்லுரியை முடித்த இளைஞர்கள், ஒரே அறையில் உட்கார வைத்து நான்கு கேள்வி கேட்டார்கள் நான்கு கேள்விகளுக்கும் பதிலளித்தேன், பாராட்டினார்கள், அப்புறம் தனி அறையில் சுய சரிதையை கேட்டார்கள், கட்சியில் இருக்கீர்களா? சுய தொழில் செய்து கொண்டு நேரம் கிடைக்குமா? வாகனம் வைத்துள்ளீர்களா? போன்ற கேள்விக்கு பிறகு என் பெயரின் அர்த்தத்தையும் முழு உச்சரிப்பையும் கேட்டு, சரி உங்களுக்கு கடிதம் வரும் அப்புறம் வந்து பாருங்கள் என அனுப்பி விட்டனர்.

அந்த கடிதம் ஆறுமாதம் வரை வரவில்லை, ஏன் என நண்பர்களிடம் விசாரித்த பொழுது ஒருவர் சொன்னார் நீங்கள் என்ன தான் சிறப்பாக செய்தாலும், ஜாதி, மதமும் சிறப்பு தகுதியாக வேண்டும், அதை அங்கு அதிகமாக எதிர்பார்பார்கள் என்றார், ஒரு வேளை அதுவும் காரணமாய் இருக்குமோ? என்ற சந்தேகம் வந்தது.

மூன்று வருடம் கழித்து கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம் ஆரம்பித்த பிறகு நாம் செய்யும் செயல்கள், மக்கள் பிரச்சனைகள் யாருக்கும் தெரிவதில்லை, மக்களிடம் சென்றடைய சிறந்த வழி செய்தி தாள், அதை தொடங்க முடிவு செய்யப்பட்டது, அதன்படி  நண்பன் வீர மோகன் துணையோடு இந்த மக்கள் நல்லுறவு மாதப் பத்திரிகை தொடங்கப்பட்டது.

இது இன்று வரை இலவச பிரதி இரண்டாயிரம், முன்றாயிரம் பிரதி நம்மை சுற்றியுள்ள வார்டுகளில் நேரிடையாக வீடு வீடாக நண்பர்கள் மூலமாக கொண்டு சேர்கிறோம்.

இதில் பணத்துக்காக விளம்பரம் இல்லை, அதிக அரசியல் இல்லை, விழீப்புணர்வு, மருத்துவம், சட்டம், கதை, நற்பண்பு, நல்லுறவு, நல்லவிசயம் மட்டும் இருக்கும், ஜாதி மத மோதல் விசயங்கள் இருக்காது,  நல்ல விசயங்கள் யார் தந்தாலும் எங்களது பத்திரிக்கையில் வரும், குறிப்பாக கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம் செய்த மக்கள் பணி, களப்பணி  வரும், எங்களது பத்திரிக்கை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள், ஒரு சிலர் கோப்புகளாக வைத்துள்ளார்கள், ஒரு சிலர்  தொலைபேசியில் அழைத்தும், நேரிலும் பாராட்டு தெரிவிக்கின்றனர், அதன் மகிழ்ச்சி வார்தைகளில் அடங்காது, உணர்ச்சியாக உணரும் போது  தெரிகிறது!

அனைத்து நல்உள்ளங்களுக்கும் மக்கள் நல்லுறவு குழு சார்பாக நன்றி! 

என்றும் அன்புடன்
இ.சுக்குருல்லா பாபு,
மக்கள் நல்லுறவு

Wednesday, April 18, 2018

அரசியல் பாடம்


இன்றைய இளைஞர்களுக்கு  அரசியல் பற்றி மூத்த உறுப்பினர் ஒருவர்  சொன்ன அரசியல் பாடம் :

நாடக மேடை : இன்றைய அரசியலில் நீ இருந்தால்  அருகில் இருப்பவனை கூட நம்பாதே!

உன்னை ஏணிப்படியாக்கி ஏறி போவார்கள், நீ ஏமாந்து போவாய் குறிப்பாக அன்றைய தேவைக்கு பயன்படுத்துவார்கள்.

உள்ளுக்குள் சுயநலம் தான் அதிகமாக இருக்கும்! நல்ல வழியை காட்டமாட்டார்கள், காசு, பதவி இருக்கும் வரை கூட்டம் உன்னிடம் இருக்கும், இரண்டும் போனால் அனைவரும் காணாமல் போய்விடுவார்கள்.

பொதுநலம் குறைவாக தெரியும், ஆசை, வேசம், அதிகம், பணத்திற்க்கு முன்னுரிமை, குறிப்பாக உனக்கு ஆசையை காட்டி அவங்க படி ஏறி போயிடுவாங்க!

பதவி மோகம் உண்டாகும், விளம்பரம் தான் இன்றைய அரசியல், அணிகள் பல இருக்கும் களப்பணி இருக்காது.

மதுவுக்கும், பணத்திற்க்கும் கூடும் கூட்டம், கொள்கை, லட்சியம், உரிமைக்கு கூடாது, உண்மையான அர்பணிப்பு இருக்காது.

ஜாதிக்கு முன்னுரிமை கொடுக்கும், சாதிப்பவனுக்கு கொடுக்காது, உன் உழைப்பு, நேரம், வீணாகும், அவன் அவன் பதவியை காக்க எந்த சூழ்நிலையிலும் எப்படி வேண்டுமானலும் மாறுவார்கள்!

இன்றைய எதிரி நாளைய நண்பன், இன்றைய நண்பன் நாளைய எதிரி.

யாரையும் நம்பி ஏமாறாதே! பொருளை இழக்காதே! பொறுமை இழக்காதே! போதை கொள்ளாதே! போட்டி பொறாமை அதிகமாய் இருக்கும், அன்பு குறையும்.

நல்லவர்கள், நல்லதை செய்ய நினைப்பவர்கள் இன்றைய அரசியலில் முன்னேற முடியாது, முட்டுக்கல் அதிகமாக இருக்கும், முட்கள் இருக்கும், அதை மக்களும் உணரமாட்டார்கள்.

உங்கள் பாஷையில் சொன்னால் கட்டப்பாவும் இருப்பான், எட்டப்பாவும் இருப்பார்கள்.

பாதி பேருக்கு கட்சி, கொள்கை, லட்சியம், கடமை,  செயல்பாடு, மக்கள் பணி, களப்பணி, அரசியல்பணி, தொண்டு, சேவை, தேர்தல் பணி, இன்றைய விஞ்ஞான வளர்ச்சி பற்றி அறிவு, பேச்சு திறன் அடிப்படையான விசயங்கள் இப்படி எதுவுமே  தெரியாது, ஆனால் பொறுப்பில்  பதவியில்  இருப்பது ஆச்சரியம்.

அரசியல் கடல் என்பது மறைந்து, குறைந்து சாக்கடையாக மாறிவிடும் சூழ்நிலையாகி வருகிறது.

எங்கள் காலத்தில் இருந்தது போல தலைவர்களும் இல்லை, தொண்டர்களும் இப்போழுது இல்லை.

நாகரிகமற்ற மேடை பேச்சுகள், விமர்சனம், ஜாதி மத மோதல் பேச்சுக்கள், விளம்பரம், துணையாகும் ஊடகங்கள்.

அரசியலில் ஒவ்வொரு அடியும் கண்ணில்லாத குருடர்கள் போல யோசித்து, தடியை தட்டிக்கொண்டு, காதை தீட்டிக்கொண்டு, புத்தியை கத்திபோல பதப்படுத்தி கொண்டு எச்சரிக்கையாய் எடுத்து வைத்தால் எளிதில் கடந்து போகலாம்.

எனக்கு கண் இருக்கு என ஆட்டம் போட்டால் பள்ளத்தில் வீழ்ந்து விடுவாய், அல்லது தள்ளி விட்டு விடுவார்கள்! கவனம்!