Monday, April 18, 2016

சாலையின் நடுவே மின்சார டிரன்ஸ்பார்மர், மின் கம்பம்.


கோவை மக்கள் நல்லுறவு
சாலையின் நடுவே மின்சார டிரன்ஸ்பார்மர், மின் கம்பம் பொதுமக்கள் அவதி
இடம் சங்கனூர் ரோடு, கனேஷ் தியேட்டர் அருகில்
ராயப்பா லேஅவுட்,
கணபதி
மின் கம்பத்தால்  அடிக்கடி விபத்து,
மக்களுக்கு ஆபத்து, அடிக்கடி  மின்வெட்டு, சாலையின் நடுவே மின்கம்பம்,  கம்பி தாழ்வாக அமைக்கப்பட்டு உள்ளாதால் அதிவேகமாக வரும் லாரிகள் பஸ்கள்
கவனிக்காமல் அடிக்கடி  மின் கம்பத்தில் உரசிசெல்கிறது,
விபத்தும் எற்படுகிறது,இரண்டு சக்கரவாகனத்தில் வருபவர்கள் பலதடவை நேராக மோதியுள்ளனர்,
வாகனநெரிசல் உண்டாகுகிறது,
இரவு நேரங்களில் தெளிவாக  தெரிவதில்லை,
பலமுறை அதிகாரிகள் நேரில் பார்த்தும்,
இதை அறிந்தும் மின்சார வாரியம்  எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை
இனியும் தாமதம் செய்யாமல்
பெரிய விபத்து அசம்பாவிதம் நடைபெறும் முன் பொதுமக்கள் நலன் கருதி தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியத்தை கேட்டுக்கொள்கிறோம்.




மக்கள் நல்லுறவு

நமது சிறப்பு நிருபர் - B.சதீஷ்குமார்

Friday, April 15, 2016

கும்பிடும் வரை கடவுள்;

படித்ததை பகிர்கிறது

மக்கள் நல்லுறவு


படித்ததில் பிடித்தது:

கும்பிடும் வரை கடவுள்; 

திருட்டுப் போனால் சிலை !

அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!

'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!


இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்

இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!


மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.


கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

வாழ்க வளமுடன்
மக்கள் நல்லுறவு

கைது


மக்கள் நல்லுறவு பகிர்கிறது      

.1 கைது மற்றும் விசாரணை ஆகிய பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் அவர்களின் பெயர் மற்றும் பதவியை குறிக்கும் பேட்ஜை அனைவரின் பார்வையில் தெளிவாக படும்வகையில் அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் அதிகாரிகள் குறித்த முழு விவரங்களும் ஒரு பேரேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2.ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி, கைது சம்பவத்தின்போதே அதற்கான குறிப்பை தயாரிக்க வேண்டும். அந்த குறிப்பில் கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது அப்பகுதியில் வசிக்கும் மரியாதைக்குரிய நபர் ஒருவரிடம் சான்று ஒப்பம் பெற வேண்டும். கைது செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தை குறித்து கைது செய்யப்படும் நபரிடம் கையொப்பம் பெறலாம்.

3.கைது குறிப்பில் சாட்சிக் கையொப்பம் இடுபவர் கைது செய்யப்படுபவரின் உறவினராகவோ, நண்பராகவோ இல்லாதபோது – கைது  செய்யப்படும் நபர் – தாம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ, நலனில் அக்கறை கொண்ட வேறெந்த நபருக்கோ தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு. கைது செய்த அதிகாரி மற்றும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் இந்த தகவலில் கூறப்படவேண்டும். இதற்கான வசதியை செய்து தரவேண்டியது கைது செய்யும் அதிகாரியின் கடமையாகும்.

4.கைது செய்யப்படும் நபரின் உறவினரோ, நண்பரோ, நலனில் அக்கறை கொண்ட வேறெவரோ கைது செய்யப்படும் நகரம் அல்லது மாவட்டத்திற்கு வெளியே இருந்தால், குறிப்பிட்ட கைது சம்பவம் குறித்து சட்ட உதவி மையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தந்தி மூலம் தகவல் தெரிவித்து, கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது நண்பருக்கு 12 மணி நேரத்திற்குள் கைது குறித்த தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.

5.கைது செய்யப்படும் நபருக்கு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

6.கைது செய்யப்பட்டுள்ளவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், கைது சம்பவம் குறித்து அவரது எந்த உறவினருக்கு அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது பதிவு செய்யப்படவேண்டும். மேலும், எந்த அதிகாரிகளின் பொறுப்பில் கைது செய்யப்பட்ட நபர் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் பதிவு செய்யப்படவேண்டும்.

7.கைது செய்யப்பட்ட நபர் விரும்பினால் அவர் உடலில் உள்ள பெரிய மற்றும்  சிறிய காயங்கள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பில் கைது செய்யும் அதிகாரியும், கைது செய்யப்படும் நபரும் கையொப்பம் இட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பின் நகல் கைது செய்யப்படும் நபருக்கும் வழங்கப்பட வேண்டும்.

8.கைது செய்யப்படும் நபரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் மூலமோ, மருத்துவர்கள் குழு மூலமோ பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான மருத்துவர் குழுவை அனைத்து மாநில மருத்துவ இயக்குனர்கள் அமைக்க வேண்டும்.

9.கைது சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும், கைது குறிப்புடன் உரிய அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவருக்கு உரிய காலத்தில் அனுப்பப்படவேண்டும்.

10.கைது செய்யப்படும் நபரிடம் விசாரணை நடைபெறும்போது, முழு விசாரணையின்போது முடியாது என்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

11.நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைகளிலும், அந்தந்த அலுவலகங்களின் அதிகார வரம்புக்குள் வரும் காவல்நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கைது சம்பவங்கள் குறித்த தகவல்கள் 12 மணி நேரத்திற்குள் பெறப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட இந்த அம்சங்களை நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மாநில மொழிகளில் எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் நடைமுறையில் நாட்டில் உள்ள எந்த காவல்நிலையத்திலாவது இந்த உச்சநீதிமன்ற உத்தரவு எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

மக்கள் நல்லுறவு

குடும்ப சொத்து

மக்கள் நல்லுறவு பகிர்கிறது      

குடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்
பாகப்பிரிவினை..!

''தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதாவது, குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப்பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.


தான பத்திரம்..!
சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையைக் கையாளலாம்.

ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்துகொள்ளலாம்.

ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.


உயில்..!
இது விருப்ப ஆவணம்; சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.

தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.

மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

பெண்களுக்கான சொத்துரிமை!

பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

2005-ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி, பெண்கள் தனது தந்தையின் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். மேலும், 25.3.1989-க்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பிரிவினை கோர முடியாது. ஒருவேளை அந்த சொத்து விற்கப்படாமல் அல்லது பாகம் பிரிக்கப்படாமல் இருந்தால் உரிமை கோர முடியும்.

வாரிசுச் சான்றிதழ்..!
வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்'' 
பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

மக்கள் நல்லுறவு

திருமணப் பதிவு

மக்கள் நல்லுறவு பகிர்கிறது      

Marriages are made in heaven ன்னு சொன்னாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான்.

திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் நடவடிக்கையிலும் உள்ளங்களிலும் தான் இருக்கிறது. திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

குடியுரிமை,சொத்துரிமை, குழந்தைகளின் வாரிசுரிமை போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான விவகாரங்களுக்கும் திருமணத்தை பதிவு செய்தல் என்பது அவசியமாகிறது. ஏன் வேண்டாமெனில் முக்கியமாக டைவர்ஸ் செய்வதற்கு கூட தேவையாகிறது.


2009க்கு முன்பு திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசிமில்லை. அப்போது மூன்று வகையான திருமண பதிவுச் சட்டங்கள் இருந்தன.

இந்து திருமணச்சட்டம்
தனி திருமணச் சட்டம்
கிரிஸ்தவ திருமணச் சட்டம்.

இந்த மூன்று வகையான சட்டங்களில் ஒன்றில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறையே 2009க்கு முன்பு வரை இருந்தது.

உச்ச நீதிமன்றம் சீமா Vs அஸ்வினி குமா ர் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட் டாயம் பதிவு செய்யப்பட வேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வர வேண் டும் என்று கருத்து தெரிவி த்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டா ய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது.

பிறகு தான். “தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திற்கு பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது. ஆனால் அப்படி நடைபெறுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நாமதான் எந்த சட்டத்தையும் மதிக்க மாட்டோமே. ஆனால் எல்லோரையும் வாய்க்கு வந்த படி பகடி செய்து கொண்டே இருப்போம். அதான் தமிழனின் தனி சிறப்பே . Ok.. No politics. விவரங்களை எளிமையாக பார்ப்போம்.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?
கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. சில சார்பதிவாளர்கள் மூன்று சாட்சியும் இட சொல்கிறார்கள். சாட்சிகள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்.

விதிமுறைகள் என்ன..?
திருமணம் ஆகாத ஆண்/பெண்களும்,கணவனை/மனைவியை இழந்தோரும், சட்டரீதியான மணவிலக்கு செய்தோரும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்ய தகுதி படைத்தவர்கள்.
திருமணத்தன்று ஆணுக்கு வயது 21-ம் பெண்ணுக்கு வயது 18-ம் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.

திருமண பத்திரிக்கை.
கோவில்/சர்ச்/பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாக கொடுக்கும் ஆவணம்.
திருமணம் நடந்ததிற்கான வேறு ஆதாரங்கள் (நோட்டரி அபிடிவிட், போன்ற ஆவணங்கள்)
முகவரிக்கான ஆதாரமாக (Address Proof) கீழ்க்கண்ட ஒன்றில் ஏதேனும் ஒன்று கொடுக்கப்படவேண்டும்.

*வாக்காளர் அடையாள அட்டை
*குடும்ப அட்டை
*ஓட்டுனர் உரிமம்
*பாஸ்போர்ட்
வயதுக்கான சான்றாக (Age Proof) கீழ் கண்ட ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
*பிறப்புச் சான்று
*PAN அட்டை. 
*பள்ளி – கல்லூரிச் சான்று
*பாஸ்போர்ட்/விசா

கணவன், மனைவி இருவரின் பாஸ்போர்ட் 4 புகைப்ப்டங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த 60 நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கட்டணம் 150 ரூபாய்.

அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்?
திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும், பொதுவாக சொல்ல வேண்டுமானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாமல், அதன் பிறகு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போது, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாளரிடம் முறையீடு செய்யலாம்.

இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப்போது என்ன அவசியம்?
பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

இந்தச் சட்டத்தால் என்ன பலன்?
ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்வதும் உண்டு.

இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா?
ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இந்தச் சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப் போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம்.இதுவரை பதியாதவர்கள் உடனே பதிவு செய்யலாம்.

அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

திருமணம் பதிவு செய்யப்படாவிடில் " Penalty" உண்டு என்கிறது சட்டம். ரூபாய் ஆயிரம் வரை மட்டுமே. அதற்காக பதிவு செய்யாமல் இருக்க வேண்டாம். ஆனால் பதிவு செய்து விட்டு திருமண சான்றிதழில் தவறான மாறுதல்கள் செய்தால் பிறகு 5 வருடம் வரை அரசு தான் உங்களுக்கு “மாமியார் வீடு”.

மக்கள் நல்லுறவு 

ரிட் மனு


மக்கள் நல்லுறவு பகிர்கிறது      

ஒரு “ரிட்” ட போடு!, 

தன்னால வழிக்கு வருவாய்ங்க!ன்னு சிலர் பேசுறத கேட்டுருப்பீங்க. அப்படீன்னா என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

"WRITTEN ORDER" என்பதைத்தான் ரிட் மனு என்று சொல்கிறோம். அதாவது அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்க சொல்லி நாம் தாக்கல் செய்யும் மனுவிற்கு பெயர்தான் ”ரிட்” மனு. இப்ப புரியுதா? சரி, எது எதுக்கெல்லாம் இந்த மனுவை தாக்கல் செய்யலாம்! என்பதை பார்ப்போமா?

அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கல் தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு “ரிட்” மனு தாக்கல் செய்யலாம்
.
பொதுநல வழக்குகளை (PUBLIC INTEREST LITIGATION), பொதுநலம் பாதிக்கும் போது வழக்கு தொடரலாம்.

உங்கள் ஏரியாவில், சாலை ரொம்ப மோசமாக இருந்து, அதனை சரிசெய்யச் சொல்லி நீங்கள் அதற்குரிய துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும், அவர்கள் அது சம்பந்தமாக ஏதும், நடவடிக்கை எடுக்கவில்லை! என்றால், அந்தத்துறை அதிகாரிக்கு, அதனை சரி செய்யச்சொல்லி உத்தரவு போட அரசாங்கத்தைக் கேட்கலாம்.

நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு தொழிற்சாலையில் இருந்து புகை அல்லது தூசிகள் வந்து, அவை அந்தப்பகுதியின் சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் புகார் செய்யலாம். 

நீங்கள் புகார் அளித்து 60 நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கத்தை அதற்குரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி “ரிட்” மனு தாக்கல் செய்யலாம்.

“ரிட்” மனுவை ஐந்து வகைகளில் தாக்கல் செய்யலாம்.
1.Writ of Mandamus நீதிப்பேராணை:
***************************************************
தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்டவிரோதமான உத்தரவை பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று “ரிட்” மனு தாக்கல் செய்யலாம். இதற்கு நீதிப்பேராணை என்று பெயர். இதனை பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

2.Certiorari writ செர்ஷயோரரி ரிட் 
**************************************************
ஒரு ஹை கோர்ட் அதிகாரத்தில் உள்ள ஒரு கோர்ட் அல்லது தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள அரசு அதிகாரி சட்ட விரோதமாக ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவோ அல்லது அந்த குறிப்பிட்ட நீதிமன்றத்துக்கோ/ அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக் கோரி கேட்பதுதான் இதன் அடிப்படை. இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

3.Quowarranto Writ கோவாரண்டோ ரிட் மனு
******************************************************************
எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ, அல்லது தனது பதவியுன் அதிகார வரம்பை மீறி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்தாலோ, அதனை எதிர்த்து போடப்படுவது இந்த மனுவாகும். இதனை யார் வேண்டுமானாலும் போடலாம்.

4.Prohibition Writ பிராகிபிஷன் ரிட் மனு
********************************************************
ஒரு நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படும்போது, அதனை தடுக்க போடப்படும் மனு இதுவாகும். இதனையும் பாதிக்கப்பட்டவர் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

5.Hebeas Corpus Writ ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனு
**************************************************************************
இதற்கு ஆள் கொணர்வு ஆணை என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவரை காணவில்லை என்றாலோ, அல்லது ஒருவரை காவல்துறையினர் தவறாக காவலில் வைத்திருந்தாலோ, அல்லது ஒருவரை யாரோ கடத்தி எங்கோ அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரித்து, நீதிமன்றமானது அந்த நபரை நீதிம்ன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடும்.

மக்கள் நல்லுறவு

தமிழ்நாட்டில் தொழில் செய்பவர்கள் TIN NO: (Taxpayer identification number)

மக்கள் நல்லுறவு பகிர்கிறது      

தமிழ்நாட்டில் தொழில் செய்பவர்கள் அரசுக்கு வரி செலுத்துவதற்காக உள்ள ஒரு அடையாள எண்ணை டின் (Taxpayer identification number) நம்பர் என்று சொல்கிறோம். புதியதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள், தங்கள் தொழில் சம்பந்தமான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து இந்த எண்ணை வாங்க வேண்டும்.

உங்களது தொழில் எந்த (உற்பத்தி, சேவை , வர்த்தகம் அல்லது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) ரீதியாக இருந்தாலும் தாங்கள் அதன் சம்பந்தமான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து டின் நம்பரை கண்டிப்பாக வாங்க வேண்டும்.

இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, “வணிகவரித்துறை” அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

உங்களது தொழிலை வேறு ஒரு மாநிலத்தில் தொடங்குவதாக இருந்தால், தாங்கள் அந்த மாநிலத்திடமிருந்தே டின் நம்பரை பெறவேண்டும்.

தங்களது தொழிலானது நமது மாநிலத்தைத் தாண்டி, வேறு மாநிலத்திலும் நடைபெறுகிறது என்றால், அதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து, மத்திய விற்பனை வரி எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த எண் மொத்தம் 11 இலக்கங்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறியீடு உள்ளது.

இந்த எண்ணானது, மதிப்புக் கூட்டு வரி விதிப்பு (Value added tax) எனப்படும் வாட் கணக்கோடு தொடர்புடையதாகும். இந்த எண்ணைப் பெற்று தொழில் நடத்தும் ஒருவர், முறையாக அரசுக்கு வரியை செலுத்திவிட்டுத்தான் தொழில் செய்றார்! என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த எண்ணைப் பெறுவதற்காக Form-F, Form-A விண்ணப்பிக்கும் போது, அதனுடன்
1. தொழில் செய்பவரது புகைப்படம் 2 
2. குடும்ப அட்டை நகல்
3. பான் கார்டு நகல்
4. சொத்து தொடர்பான ஆவணங்கள் நகல்
5. வாடகை ஒப்பந்த பத்திரத்தின் நகல்
6. செய்யும் தொழிலுக்கு ஏற்ப வங்கி வரைவோலை (Demand Draft) 
இது வணிக வரித்துறையின் பெயருக்கு எடுக்க வேண்டும்.

மேலும், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருக்கும் இருவரது பரிந்துரை கடிதத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.


ஆவணங்களை சரிபார்த்தபின் விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு வணிகவரித்துறையில் இருந்து, சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

இந்த டின் நம்பரை வைத்து ஒருவர், பல தொழில்களை தொடங்கிக் கொள்ளலாம். ஆனால் எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் வணிகவரித்துறை அலுவலகத்தில் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டு தொடங்க வேண்டும்.

யார் பெயரில் டின் நம்பர் பெறப்பட்டுள்ளதோ, அவர் பெயரில்தான் தொழில்களை தொடங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

மக்கள் நல்லுறவு