Friday, April 15, 2016

திருமணப் பதிவு

மக்கள் நல்லுறவு பகிர்கிறது      

Marriages are made in heaven ன்னு சொன்னாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான்.

திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் நடவடிக்கையிலும் உள்ளங்களிலும் தான் இருக்கிறது. திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

குடியுரிமை,சொத்துரிமை, குழந்தைகளின் வாரிசுரிமை போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான விவகாரங்களுக்கும் திருமணத்தை பதிவு செய்தல் என்பது அவசியமாகிறது. ஏன் வேண்டாமெனில் முக்கியமாக டைவர்ஸ் செய்வதற்கு கூட தேவையாகிறது.


2009க்கு முன்பு திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசிமில்லை. அப்போது மூன்று வகையான திருமண பதிவுச் சட்டங்கள் இருந்தன.

இந்து திருமணச்சட்டம்
தனி திருமணச் சட்டம்
கிரிஸ்தவ திருமணச் சட்டம்.

இந்த மூன்று வகையான சட்டங்களில் ஒன்றில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறையே 2009க்கு முன்பு வரை இருந்தது.

உச்ச நீதிமன்றம் சீமா Vs அஸ்வினி குமா ர் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட் டாயம் பதிவு செய்யப்பட வேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வர வேண் டும் என்று கருத்து தெரிவி த்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டா ய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது.

பிறகு தான். “தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திற்கு பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது. ஆனால் அப்படி நடைபெறுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நாமதான் எந்த சட்டத்தையும் மதிக்க மாட்டோமே. ஆனால் எல்லோரையும் வாய்க்கு வந்த படி பகடி செய்து கொண்டே இருப்போம். அதான் தமிழனின் தனி சிறப்பே . Ok.. No politics. விவரங்களை எளிமையாக பார்ப்போம்.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?
கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. சில சார்பதிவாளர்கள் மூன்று சாட்சியும் இட சொல்கிறார்கள். சாட்சிகள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்.

விதிமுறைகள் என்ன..?
திருமணம் ஆகாத ஆண்/பெண்களும்,கணவனை/மனைவியை இழந்தோரும், சட்டரீதியான மணவிலக்கு செய்தோரும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்ய தகுதி படைத்தவர்கள்.
திருமணத்தன்று ஆணுக்கு வயது 21-ம் பெண்ணுக்கு வயது 18-ம் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.

திருமண பத்திரிக்கை.
கோவில்/சர்ச்/பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாக கொடுக்கும் ஆவணம்.
திருமணம் நடந்ததிற்கான வேறு ஆதாரங்கள் (நோட்டரி அபிடிவிட், போன்ற ஆவணங்கள்)
முகவரிக்கான ஆதாரமாக (Address Proof) கீழ்க்கண்ட ஒன்றில் ஏதேனும் ஒன்று கொடுக்கப்படவேண்டும்.

*வாக்காளர் அடையாள அட்டை
*குடும்ப அட்டை
*ஓட்டுனர் உரிமம்
*பாஸ்போர்ட்
வயதுக்கான சான்றாக (Age Proof) கீழ் கண்ட ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
*பிறப்புச் சான்று
*PAN அட்டை. 
*பள்ளி – கல்லூரிச் சான்று
*பாஸ்போர்ட்/விசா

கணவன், மனைவி இருவரின் பாஸ்போர்ட் 4 புகைப்ப்டங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த 60 நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கட்டணம் 150 ரூபாய்.

அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்?
திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும், பொதுவாக சொல்ல வேண்டுமானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாமல், அதன் பிறகு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போது, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாளரிடம் முறையீடு செய்யலாம்.

இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப்போது என்ன அவசியம்?
பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

இந்தச் சட்டத்தால் என்ன பலன்?
ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்வதும் உண்டு.

இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா?
ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இந்தச் சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப் போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம்.இதுவரை பதியாதவர்கள் உடனே பதிவு செய்யலாம்.

அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

திருமணம் பதிவு செய்யப்படாவிடில் " Penalty" உண்டு என்கிறது சட்டம். ரூபாய் ஆயிரம் வரை மட்டுமே. அதற்காக பதிவு செய்யாமல் இருக்க வேண்டாம். ஆனால் பதிவு செய்து விட்டு திருமண சான்றிதழில் தவறான மாறுதல்கள் செய்தால் பிறகு 5 வருடம் வரை அரசு தான் உங்களுக்கு “மாமியார் வீடு”.

மக்கள் நல்லுறவு 

No comments:

Post a Comment