Wednesday, November 30, 2016

பயனுள்ள குறிப்புகள் – 5

மக்கள் நல்லுறவு   பகிர்கிறது 

101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.
102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.
103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.
104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.
105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.
106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.
107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.
108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.
109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.
110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.
111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.
112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.
113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.
114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.
115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.
117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.
118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.
119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் "பிரஷ்"ஷாக இருக்கும்.
122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.
123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.
124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.
126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.
127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.
128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.
129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.
131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.
132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.
133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.
134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.
135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.
136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.
137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.
138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.

மக்கள் நல்லுறவு   

No comments:

Post a Comment