சுதந்திரம்
மக்கள் நல்லுறவு
பகிர்கிறது
சுதந்திரம் என்றால் என்ன? இந்த சுதந்திரம் எப்படிக் கிடைத்தது என்பதை எல்லாம் அறியாத
ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் ஒரு சடங்காகவே
கடைபிடிக்கப்பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப்
போல் இதுவும் ஒரு விடுமுறை நாளாக மட்டும் மாற்றப்பட்டுவிட்டது.
சுதந்திர தினத்தைக் குறி வைத்து
எப்படியெல்லாம் பணம் பண்ணலாம் என்பதை தொலைக்காட்சிகள் நன்றாக புரிந்து
வைத்திருக்கின்றன. சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான நிகழ்ச்சிகளை, அதில் பங்கெடுத்த தியாகிகளின் நேர்காணல்களை வெளியிடுவது
பற்றிய அக்கறை தொலைக்காட்சிகளுக்கு இல்லை. சுதந்திரப் போராட்டம் தொடர்பான
படங்களின் உரிமை அவர்களிடம் இருந்தாலும் கூட அதனை அவர்கள்
ஒளிபரப்பத் தயாரில்லை. நாள் முழுக்க பொழுது போக்கு என்கிற பெயரில் காண்பிக்கப்படுகிற
நிகழ்ச்சிகளை வைத்தே ஊடகத்தினிரிடமும், நம் மக்களிடமும் உள்ள
சுதந்திரம் குறித்த உணர்வினை மதிப்பிட்டுவிடலாம்.
நெடுங்காலத் தொடர்
போராட்டத் துக்குப் பின்புதான் நமக்கு ஆங்கிலேயர் களிடம் இருந்து விடுதலை
கிடைத்தது. எதற்காக அவர்களிடம் இருந்து விடுதலை பெறப் போராடினோம்? அந்த விடுதலையின் மூலம் என்னென்ன பலன்களை அடைந்திருக்கிறோம்? உண் மையிலேயே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்த நம்
முன்னோர்களின் கனவு நனவாகி இருக்கிறதா? சுதந்திரம் என்பது
ஒவ்வொரு குடிமகனுக்கு மானது. அப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனைவருக்கும்
கிடைத்திருக்கிறதா?
ஆங்கிலேயரிடம் இருந்து
சுதந்திரத்தைப் பெற்றதற்காக மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் இதேபோன்று சுதந்திர தினத்தைக்
கொண்டாடப் போகிறோமா? ‘நாம் நினைத்த இந்தியா
அமைந்துவிட்டது; ஒவ்வோர் இந்தியனும்
வெள்ளைக்காரனிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை நினைத்து பெருமைப்படுவதும்
கொண்டாடுவதும் தேவைதான்’ என நினைக்கிறோமா?
உண்மையான விடுதலையை
இம்மக்களுக்குக் கிடைக்காமல் செய்து வருபவர்கள், அவ்வாறு
நடக்காமல் பார்த்துக்கொள்ளும் சிலரின் கையிலேயே நமது தேசியக்கொடி சிக்கிக்
கொண்டிருப்பதைப் பற்றிப் பேசவே நாம் தயங்குகிறோம். இந்நாட்டுக்கும், இம்மக்களுக்கும், இம்மண்ணுக்கும், இம்மொழிகளுக்கும் துரோகம் இழைப்பவர்களாலும், அழிப்பவர் களாலும்தான் பெரும்பாலும் நம் தேசியக்கொடி
ஏற்றப்படுகிறது. வெள் ளைக்காரனிடம் இருந்து விடுதலையைப் பெற்று, கொள்ளைக்காரர்களிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு, சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இன்று காந்தியடிகள்
உயிரோடு மீண்டெழுந்து வந்து இந்த நாட்டைச் சுற்றிப் பார்த்தால் என்ன கூறுவார்? நாம் கொண்டாடும் இந்த சுதந்திர தினத்தைப் பார்த்து என்ன
சொல்வார்? நம் நாட்டை
ஆண்டவர்களிடமும், இன்று ஆள்பவர்களிடமும்
என்ன கேட்பார்? அவர்கள் அவருக்கு என்ன
பதிலைச் சொல்ல முடியும்?
வெள்ளைக்காரனிடம் இருந்து
நம் நாட்டை மீட்டெடுத்த போது அந்த மகிழ்ச்சி இருந்தது. அப்போது ஒவ்வொரு
குடிமகனுக்கும் தன் நாடு விடுதலை பெற்ற நாளைக் கொண்டாடுவதைத் தவிர முதன்மையான
மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்?
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, சாதிக் கலவரங்கள், பெண்ணடிமை போன்ற வற்றில் எது இங்கே குறைவு? மதுவை எதிர்த்து காந்தியடிகள் நாடு முழுக்கப் பயணம் செய்து
போராடினார். இன்று ஆட்சி செய்பவர்களே மக்களிடத்தில் மதுவை ஊற்றிக் கொடுப்பதும், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் சுதந்திர தினத்தைக்
கொண்டாடுவதெல்லாம் எப்படி உண்மையான விடுதலையாக இருக்க முடியும்?
ஊழலிலும், லஞ்சத்திலும் திளைத்திருக்கும் நாட்டில், சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது சிறிதும்
குற்றவுணர்வின்றி ஆண்டுதோறும் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் கடந்தும்
நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு சொந்த வீடு கிடைக்க வழியில்லை. கழிப்பிட
வசதி கூட பெறாத மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் உலகிலேயே நம் நாட்டுக்குத்தான்
முதலிடம். உணவுப் பண்டங்களை வீணடிப்பதிலும் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல், அதற்கு உத்திரவாதமும் இல்லாமல் அலைவதும் நம் நாட்டில் தான்.
சொந்த நாட்டு மக்களுக்கான
அடிப்படைத் தேவையைக் கூட 69 ஆண்டுகள் கடந்தும்
செய்து தர முடியாத அவலத்துடன்தான் மக்கள் ஆட்சியின் மூலமாக உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள்
தொடர்ந்து சுதந்திரத்தைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டு வருகின்றன.
நமக்கு விடுதலை கிடைத்த
பின் நமது நாட்டின் உயிரான கிராமங்கள் அழியத் தொடங்கின. உள்ளூர் உற்பத்தி அழிந்து, சிறு தொழில்கள் அழிக்கப்பட்டு காலங்காலமாக செய்து வந்த
தொழில்களை விட்டுவிட்டு, தன் மண்ணை விட்டுவிட்டு
நகரத்துக்கு இடம் பெயர்ந்தோம்.
வீணாகிற நீரினை கடலுக்கு
அனுப்பினாலும் அனுப்புவோம்; அதைப் பயன்படுத்த
உங்களுக்கு தர மாட்டோம் என ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்தின் மீது பகைமையை
வளர்த்துக்கொண்டு வருகிறது. தண்ணீர் தேவை தீர்ந்தாலே நாட்டின் பெரும்பான்மையான
சிக்கல்களிடம் இருந்து விடுதலை கிடைத்துவிடும். உண்மையான முன்னேற்றம் உருவாகித்
தன்னிறைவை அடைந்து விடலாம். அதன் பின்தான் வல்லரசு கனவெல்லாம் சாத்தியமாகும்.
ஆனால், அதற்கான எந்தவித
முன்னேற்பாடும் இங்கு நடக்கிற மாதிரி தெரியவில்லை.
70 ஆயிரம் ராணுவத்தினரைப் பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டு
சுதந்திர தினம் கொண்டாடுவதையே பெருமையாக நினைக்கிறோம். சுதந்திரம் எதை கொடுத்ததோ, இல்லையோ நாட்டின் வளத்தை சுரண்டி, மக்களை ஏமாற்றி, சொத்துக்களை
கொள்ளையடிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் என்னும் தொழிலைக்
கொடுத்திருக்கிறது.
சேர்த்ததை, கொள்ளையடித்ததை எங்கே வைப்பது எனத் தெரியாமல் தான்
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கிறார்கள். வாக்கு ஒன்று கையில் இருப்பதனாலேயே நம் நாட்டில் ஏழை
எளியவர்களை உயிரோடு வைத் திருக்கிறார்கள். அது ஒன்றுதான் இந்த எளிய மக்களுக்கு
இங்கேயிருக்கும் மதிப்பு. ஆட்சியை உருவாக்குபவர்கள் ஏழைகளாகவும், அதனை முழுமையாக அனுபவிப்பவர்கள் பணக்காரர்களாகவும்
இருக்கும் வரை இங்கே எந்த முன்னேற்றமும் உருவாகப் போவதில்லை.
இனி எந்த ஒரு ஏழையும்
தேர்தலில் போட்டியிட்டு மக்களாட்சியின் அதி காரத்தில் பங்கெடுக்க முடியாது.
பணமுள்ளவர்கள் மூலமாகவே தேர்தல் போட்டிகள் நடக்கும். மீண்டும் மீண்டும் புதிய
புதிய ஆட்சிகள் உருவாகும். எந்நாளும் எதுவும் இல்லாதவனுக்கு இனி எதுவும் கிடைக்கப்
போவதில்லை.
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment