Wednesday, April 6, 2016

வீட்டுக் கடன்



மக்கள் நல்லூறவு
வீட்டுக்கடன் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை:

சொந்த வீட்டு கனவுக்கு கரம் கோர்ப்பதாக அமைவதால் பல தரப்பினரும் வீட்டுக்கடன் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். பொதுவாக வீட்டுக்கடனுக்கு இரண்டு விதமான வட்டி விகிதங்கள் நடைமுறையில் இருக்கின்றன. நிலையான வட்டி விகிதம்(பிக்சட்), மாறுபடும் வட்டி விகிதம் (பிளோட்டிங்) என்ற இந்த இரண்டு விதமான வட்டி முறைகளில் எது சாதகமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

வட்டி விகித மாறுபாடு
நிலையான வட்டி விகிதம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் மாறுதலுக்கு உட்படாமல் இருக்கும். அந்த காலக்கட்டத்தில் வீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதற்கான மாத தவணை தொகை (இ.எம்.ஐ.) மாறாமல் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட ஒரே தொகையை திரும்ப செலுத்துவது பட்ஜெட் போட்டு செலவீனம் செய்பவர்களுக்கு சிரமமின்றி இருக்கும். அதற்குபின் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படக்கூடும். அதற்கு ஏற்ப மாதத்தவணை தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் மாறுபடும் வட்டி விகிதம் அடிக்கடி மாறுதலுக்கு உட்பட்டதாக அமையும். அதனால் திருப்பி செலுத்தும் மாதத்தவணை தொகை வித்தியாசப்படும். சில மாதம் குறைந்த தொகையை செலுத்த வேண்டியிருக்கும். சில மாதங்கள் சற்று அதிகரிக்கும். இதில் எது சாதகமாக இருக்கும் என்பதை மதிப்பீடு செய்து வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமாக அமையும். முக்கியமாக வட்டி விகிதம் குறைவதற்கு அல்லது அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பதை உற்றுநோக்கி கவனித்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

திருப்பி செலுத்தும் காலம்
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளில் வட்டி விகிதம் குறைந்து பின்னர் அதிகரித்து இருக்கிறது. எனினும் இனிவரும் காலத்தில் வட்டி விகிதம் எப்படி அமையும் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். தற்போது 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் எந்த மாற்றமும் இன்றி மாதத்தவணை தொகை அமைந்திருக்கும்.

அதன் மூலம் வீட்டுக்கடனுக்கு என்று தனியாக தொகை ஒதுக்கி மாதம், மாதம் நிலையான தொகையை திருப்பி செலுத்தலாம். இது பட்ஜெட் போடுபவர்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கும். எனினும் இனிவரும் காலங்களில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் எப்படி அமையும்? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சாதகமான அம்சம்
ஒருவேளை அப்படி வட்டி விகிதம் குறையும்போது அது மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்குபவர்களுக்கு சாதகமாக அமையும். வட்டிவிகிதம் எந்த அளவுக்கு குறைக்கப்படுகிறதோ அது உடனடியாக நடைமுறைக்கு வந்து விடும். அதனால் எந்த மாதத்தில் குறைகிறதோ, அந்த சமயத்தில் இருந்தே வட்டி விகிதமும் குறைய ஆரம்பிக்கும் என்பதால் மாறுபடும் வட்டிவிகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு ஆதாயம் கிட்டும்.

வட்டி விகிதம் குறையும்போது எந்த வங்கி மற்றும் வீட்டுவசதி நிறுவனத்தில் குறைவாக வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறதோ அங்கு மாறுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி மாறும்போது செயல்பாட்டு கட்டணம் உள்பட ஒருசில கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். அந்த கட்டணங்களுக்கு ஆகும் தொகை லாபம் தருவதாக அமையுமா? என்றும் பார்க்க வேண்டும். ஏனெனில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் சமயத்தில் அது வட்டி விகிதத்தில் எதிரொலிக்கும். ஒரு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனங்களுக்கு இடையே வட்டி விகிதம் பெரிய அளவில் மாறுபாடு இல்லாதபோது இத்தகைய கட்டணங்கள் செலுத்த வேண்டியிருந்தால் அது சாதகமாகத்தான் இருக்குமா? என்று கணக்கீடு செய்து பார்க்க வேண்டும்.
வட்டி விகித மாற்றம்
வீட்டுக்கடனை எத்தனை ஆண்டுகளுக்கு வாங்கி இருக்கிறோமோ அதற்கு ஏற்ப வட்டி விகிதத்தை ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். வீட்டுக்கடனை திருப்பி செலுத்தும் இறுதி காலக்கட்டம் வரையில் கணக்கிடும்போது வட்டி விகிதத்தில் சிறு மாற்றம் இருந்தாலும் அது பெரிய தொகையாக மாறிவிடும். அந்த தொகையை தற்போது செலுத்தி வரும் வட்டி விகிதத்துடன் ஒப்பிடும்போது லாபம் தருவதாக இருந்தால் வீட்டுக்கடனை மாற்றம் செய்வது பலன் தருவதாக அமையும். இனிவரும் காலங்களில் வட்டிவிகித மாறுபாட்டை கவனத்தில் கொண்டு வீட்டுக்கடனை தேர்வு செய்வது புத்திசாலித்தனமாக அமையும்.


மக்கள் நல்லூறவு

No comments:

Post a Comment